சென்னை:
நாடு முழுவதும் இன்று மகா சிவராத்திரி விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து சிவாலயங்களும் மலர்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இன்று மாலை முதல் நாளை காலை வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. மகா சிவராத்திரி விழாவை மிகவும் உற்சாகமாக கொண்டு செல்லும் வகையில், பல்வேறு கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சிவராத்திரி தினமான இன்று சிவபெருமானை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் காலை முதலே கோவில்களுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம், மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள ஸ்ரீ மகா காளேஸ்வரர் ஆலயம், அமிர்தசரசில் உள்ள ஷிவாலா பாக் பையான் கோவில், டெல்லி சாந்தினி சவுக்கில் உள்ள ஸ்ரீ கவுரி சங்கர் ஆலயம், மும்பையில் உள்ள பபுல்நாத் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற ஆலயங்களில் வழக்கத்தைவிட இன்று ஏராளமான பக்தர்கள் திரண்டனர். காலை முதலே பக்தர்கள் வரிசையில் நீண்டநேரம் காத்திருந்து சிவபெருமானை தரிசனம் செய்கின்றனர்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு, கர்நாடக மாநிலம் கலபுரகியில் பிரம்மகுமாரிகள் இயக்கத்தில் உள்ள 25 அடி உயர சிவலிங்கம், சுமார் 300 கிலோ பட்டாணியால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மகா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற உள்ளது.